search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

    திருப்பூர் அருகே கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த பெண்ணிடம் ரூ. 24 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் குமார் நகர் வலையங்காடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் விஜய். பெயிண்டர். இவரது மனைவி தீபா (21). கணவன்-மனைவி இருவரும் அனுப்பர் பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    எனது கணவர் பிறந்த நாளுக்கு அவருக்கு தெரியாமல் சர்ப்ரைசாக இரு சக்கர வாகனம் பரிசு வழங்க முடிவு செய்தேன். இதற்காக ஓ.எல்.எக்ஸ் இரு சக்கர வாகன விற்பனை இணைய தளத்தில் பதிவு செய்தேன். அதில் இருந்த புதிய இரு சக்கர வாகனம் எனக்கு பிடித்து இருந்ததால் அதனை தேர்வு செய்ய முடிவு செய்தேன்.

    அதில் ஒரு போன் எண் இருந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். அப்போது எதிர் முனையில் பேசியவர் தனது பெயர் லோகேஷ் எனவும், சூலூர் விமானப்படையில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் ரூ. 60 ஆயிரத்துக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாகவும் கூறினார்.

    அவர் தனது வங்கி கணக்கு, ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதற்காக அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை எனக்கு அனுப்பி வைத்தார்.

    இதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கூறிய படி முதல் கட்டமாக ரூ. 24 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

    அதன் பின்னர் இருசக்கர வாகனத்தை நேரில் பார்க்க வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் முழு தொகையையும் கட்டினால் மட்டுமே இரு சக்கர வாகனத்தை வாங்கி தர முடியும் என்றார். அதன் பின்னர் தான் அவர் மீது சந்தேகம் வந்தது. நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

    அவரிடம் எனது பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை தர முடியாது என கூறினார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

    இந்த புகார் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×