search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்.
    X
    மத்தூர் அருகே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்.

    மத்தூரில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்த போலீசார்

    மத்தூரில் குண்டும், குழியுமான சாலையை போலீசார் மண்கொட்டி சீரமைத்தனர். இதற்காக தனியார் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தப்பட்டது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை இருவழி சாலையாக அமைக்கும் பணிக்காக சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. சாலை மற்றும் தேவைகேற்றவாறு பாலங்கள் அமைக்கும் பணியும் தற்போது மும்முரமாக நடைபெற்றன.

    இந்நிலையில் தற்செயலாக சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் நிறுத்திவிட்ட நிலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உண்டாகி, நீர்தேங்கி சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் முதல் கிருஷ்ணகிரி வரை வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நகர பேருந்து நிலையங்களுக்கு சென்றடையாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் பயனில்லை. 

    இச்சாலை வழியாக பெங்களுரு, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளுக்கு இரவும், பகலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தற்பொழுதும் சென்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின்பேரில், ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையில் மத்தூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீஸ்காரர் கோகுல் ஆகியோர் தற்காலிகமாக மத்தூர் காவல் எல்லை பகுதியான ஜோகிப்பட்டி முதல் தொகரப்பள்ளிவரை பள்ளமான பகுதிகளில் மண்கொட்டி சாலையை சீரமைத்தனர். இதற்காக தனியார் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தப்பட்டன. மேலும், இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×