
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் புதுக்கட்சியை தொடங்காமலேயே உள்ளார். அதேநேரத்தில் அவ்வப்போது அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வருகிறார்.
காந்திய மக்கள் இயக்க தலைவரான தமிழருவி மணியன், ரஜினிகாந்தை அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள்.
அரசியல் பிரவேசம் தொடர்பாகவும், தமிழருவி மணியனுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியில் வந்த தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மனைவியின் உடல்நிலை பற்றி அவர் விசாரித்தார். ரஜினியை பொறுத்தவரையில் அரசியல் தொடர்பாக எல்லோரிடமும் ஆலோசனை கேட்பவரல்ல. அவர் ஆழமாக சிந்தித்து செயல்படுபவர்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு புதிய கட்சியை நிச்சயம் தொடங்குவார். வருகிற பிறந்தநாளன்று அவர் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது என்பது அவர்களின் முடிவு. இதில் மூன்றாவது மனிதனான நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.
அரசியலை பொறுத்தவரையில் 52 ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன். இதுவரையில் ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட்டது இல்லை.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது எதிர்த்து போட்டியிடுமாறு என்னை வற்புறுத்தினார்கள் அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.