search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    சுவர் இடிந்து 17 பேர் பலி- குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்

    மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூர் ஏடி காலனியைச் சேர்ந்த 17 பேர் சுவர் இடிந்து விழுந்து பலியான செய்திகேட்டு அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

    மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருக்குச் சொந்தமான 20 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததுதான் இத்தனை உயிர்கள் பறிபோவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே, சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அந்தச் சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாததாலேயே இக்கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது. 17 உயிர்கள் பறிபோனபிறகும் அதற்குக் காரணமாக சுற்றுச்சுவரின் உரிமையாளரை கைது செய்யாமலிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அச்சுவரைத் தீண்டாமைச்சுவரென்றும் அம்மக்கள் கருதி வருகிறார்கள். இதுகுறித்தும் அரசு உரிய ஆய்வுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இம்மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியத் தமிழகக் காவல்துறையின் செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரைத் தாக்கியக் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×