search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழுமலை
    X
    ஏழுமலை

    அயனாவரத்தில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் ஓட்டேரி வாலிபர் கைது

    சென்னையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஓட்டேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. அயானவரம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் நேற்று இரவு ஒருவர் இனிப்பு வாங்கி விட்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார்.

    அந்த நோட்டின் மீது சந்தேகம் ஏற்படவே கடைக்காரர் அதை திருப்பி பார்த்து கொண்டிருந்தார். அதை பார்த்ததும் மிட்டாய் வாங்க வந்தவர் ஓட்டம் பிடித்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை துரத்தி பிடித்தனர். இதற்கிடையே அயனாவரம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை பிடித்து சோதனை போட்டார். அவர் மேலும் 6 ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றினார்கள்.

    பிடிபட்ட வாலிபர் பெயர் ஏழுமலை (23). ஓட்டேரியை சேர்ந்தவர். அவருக்கு கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அவரிடம் கைப்பற்றப்பட்ட நோட்டுக்களை ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை மாற்ற முயன்ற முதியவர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து அவரிடம் இருந்த நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்

    அவருக்கும் எங்கிருந்து நோட்டுக்கள் கிடைத்தது என்ற விவரம் இதுவரை வெளிவரவில்லை.

    இந்த சம்பவங்களின் மூலம் சென்னையில் கள்ள நோட்டுகள் தாராளமாக புழக்கத்தில் விட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை அந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது? அச்சிட்டது எங்கே? புழக்கத்தில் விடுவது யார்? என்ற விபரங்களை போலீசாரால் அறிய முடியவில்லை.

    Next Story
    ×