search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்க நகைகளை படத்தில் காணலாம்.
    X
    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்க நகைகளை படத்தில் காணலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.93 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை. நூதன முறையில் பலர் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடலூரை சேர்ந்த பயணி செந்தில் குமார் என்பவர் ரூ.19.11 லட்சம் மதிப்புள்ள 520 கிராம் தங்கத்தை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்தியாவில் விற்பனை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி வந்ததாக கூறினார். இருப்பினும் அவர் விதிகளை மீறி எடுத்து வந்ததால் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல் துபாயில் இருந்து இலங்கை வழியாக நேற்று மாலை திருச்சிக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த ரகுமான் என்பவர் ரூ.17.22 லட்சம் மதிப்புள்ள 449 கிராம் தங்கத்தையும், ஜாவித் என்பவர் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 328 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலேசியாவில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது அனிபா என்பவரிடமிருந்து ரூ.9.20 லட்சம் மதிப்புள்ள 241 கிராம் கடத்தல் தங்கத்தையும், மற்றொரு பயணியான தென்காசியை சேர்ந்த முகமது செரீப் என்பவரிடமிருந்து ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள 304 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்

    சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த சென்னையை சேர்ந்த முகமது அஷ்ரப் என்பவரிடம் இருந்து ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள 304 கிராம் தங்கத்தையும், ரகுமான் என்பவரிடமிருந்து ரூ.11.37 லட்சம் மதிப்புள்ள 297 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சிக்கு ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட 2,170 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகள் உள்ளாடை, பேண்ட் பாக்கெட், பேனா, கடிகாரம், செருப்பின் அடிப்பாகம், எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர், மணி பர்ஸ் உள்ளிட்டவற்றில் மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

    தங்கத்தின் மீதான வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் தங்கத்தை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிலர் குருவிகளாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    எனவே குருவிகளுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கம் கடத்தலில் தொடர்புடைய வியாபாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×