search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்கள்
    X
    சிறப்பு ரெயில்கள்

    தீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது?

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக ஏராளமானோர் சென்னையில் தங்கி உள்ளனர். அவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம். அந்தவகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ், தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படும். இதில் பாதுகாப்பு மற்றும் கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.

    பொதுவாக ரெயில்களில் பயணம் செய்யும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முக்கிய ரெயில்களில் காத்திருப்பு பட்டியல் நீண்ட வண்ணம் உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் சிறப்பு ரெயில் அறிவிக்கப்படுமா? என்னும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தீபாவளி

    தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் இதுவரை சிறப்பு ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிறப்பு ரெயில் குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக 5 முதல் 7 ரெயில்கள் இயக்க தற்போது தெற்கு ரெயில்வேயிடம் பெட்டிகள் உள்ளது. எனவே நெல்லை, கோவை, எர்ணாகுளம் மார்க்கமாக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் பெரும்பாலான சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தில் இருந்தே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு ரெயில்களுக்கான நேர ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறப்பு ரெயில் தொடர்பான விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×