search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் நண்பர் கைது

    ஆத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது35). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி ஆயுத பூஜை தினத்தன்று தனது ஆட்டோவிற்கு சிவா பூஜை செய்தார். பின்னர் திடீரென அவர் மாயமானார். அவரை உறவினர்கள் தேடிய போது அங்குள்ள குட்டிகரடு சுடுகாடு பகுதியில் தலையில் கம்பியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிவா உயிருக்கு போராடிய படி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆ ஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19) அவரது தலையில் இரும்பி கம்பியால் குத்தியதும் அதில் சிவா இறந்ததும் தெரிய வந்தது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- சரக்கு ஆட்டோ டிரைவரான சிவாவும், அந்த பகுதியை சேர்ந்த அஜித்குமாரும் நண்பர்கள் ஆவர். அஜித்குமாரிடம் தனக்கு தேவையான பொருட்களை வாங்கி தருமாறு அடிக்கடி சிவா வற்புறுத்தி வந்தார். மேலும் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்காவிட்டால் அஜித்குமாரை, சிவா அடிக்கடி தாக்கி வந்தார்.

    இதே போல ஆயுத பூஜை தினத்தன்றும் ஆட்டோவுக்கு பூஜை செய்ய தேவையான பொருட்களை வாங்கி வருமாறு அஜித்குமாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து அஜித்குமார் அங்கிருந்து சென்று விட்டார். பொருட்கள் வாங்கி தருமாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் சிவாவை கொலை செய்ய அஜித்குமார் முடிவு செய்தார்.

    அதன்படி சிவா செல்லும் வழியில் முன் கூட்டியே அஜித்குமார் இரும்பி கம்பியிடன் காத்து நின்றார். அப்போது அங்கு வந்த சிவாவை தான் மறைத்து வைத்திருந்த இரும்பி கம்பியால் தலையில் சரமாரியாக அஜித்குமார் குத்தினார்.

    இதில் நிலை குலைந்த சிவா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அஜித்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் சிவா இறந்ததும், அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட சிவாவுக்கு சுதா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    Next Story
    ×