search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை மார்க்கெட்
    X
    தோவாளை மார்க்கெட்

    ஆயுத பூஜையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

    ஆயுத பூஜையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. அரளிப்பூ, கேந்திப்பூ உள்பட பல வகை பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது.

    தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் தோவாளை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    பண்டிகை நாட்கள், முகூர்த்த தினங்களில் இங்கு பூ வாங்க வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டால் அவற்றின் விலையும் உயரும்.

    ஆண்டுதோறும் ஓணப்பண்டிகை நாட்களில் தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஓணத்தின்போது வெளி மாவட்டங்களில் இருந்து டன் கணக்கில் பூக்கள் தோவாளை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது.

    அதிக பூக்கள் வரத்து காரணமாக பூக்களின் விலை உயரவில்லை. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையும் இல்லை. இதனால் தோவாளை மார்க்கெட் பூ வியாபாரிகள் அதனை தெருவோரங்களிலும், குப்பை தொட்டியிலும் கொட்டி சென்றனர். மேலும் பண நஷ்டத்திற்கும் ஆளானார்கள்.

    ஓணத்தின்போது ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இப்போது வர இருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அதிக அளவில் பூக்கள் தோவாளை மார்க்கெட்டிற்கு வரவில்லை.

    வரத்து குறைந்துள்ள நிலையில் பூக்களின் தேவை இப்போது அதிகரித்து விட்டது. இதனால் அரளிப்பூ, கேந்திப்பூ உள்பட பல வகை பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது.

    ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளுக்கு தாமரைப்பூவே அதிகமாக பயன்படுத்தப்படும். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தாமரைப்பூ சப்ளை செய்யக்கேட்டு பல்வேறு நிறுவனத்தினரும் பூ வியாபாரிகளிடம் முன்பதிவு செய்திருந்தனர்.

    குமரி மாவட்டம் உள்பட அண்டை மாவட்டங்களில் உள்ள குளங்களில் தாமரைப்பூ எதிர்பார்த்த அளவிற்கு பூக்கவில்லை. மேலும் கடந்த 2 வாரங்களாக பெய்த மழையால் தாமரைப் பூக்களின் உற்பத்தியும் குறைந்து போனது.

    இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கு தாமரைப் பூக்களை எப்படி சப்ளை செய்யப்போகிறோம் என்பது தெரியாமல் வியாபாரிகள் கலங்கி நிற்கிறார்கள்.

    இதுபோல பெண்கள் அதிகமாக விரும்பும் மல்லி, பிச்சிப்பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தோவாளை மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் இன்றைய விலை விபரம் வருமாறு:- (நேற்றைய விலை அடைப்பு குறிக்குள்)

    வாடாமல்லி-(ரூ.25), ரூ.60, கோழிப்பூ-(ரூ.20), ரூ.50, மஞ்சள்கேந்தி-(ரூ.50), ரூ.70, சிவப்பு கேந்தி-(ரூ.50), ரூ.60, மரிக்கொழுந்து-(ரூ.90), ரூ.100, கொழுந்து-(ரூ.60), ரூ.80, சிவந்திப்பூ-(ரூ.70), ரூ.180, அரளிப்பூ-(ரூ.100), ரூ.300.

    ரோஜாப்பூ-(ரூ.150), ரூ.200, பிச்சிப்பூ நேற்று கிலோ ரூ.450-க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலைக்கு விற்பனை ஆனது. மல்லிப்பூ நேற்று கிலோ ரூ.600-க்கும் விற்பனை ஆனது. இன்று கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டது. ஒரு தாமரைப்பூ நேற்று ரூ.1-க்கு விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு தாமரைப்பூ ரூ.5-க்கு விற்கப்பட்டது.


    Next Story
    ×