search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜன் செல்லப்பா
    X
    ராஜன் செல்லப்பா

    இந்தி மொழியை திணிக்க முயன்றால் அதிமுக அரசு தடுத்து நிறுத்தும்- ராஜன் செல்லப்பா பேட்டி

    தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முயன்றதால் அ.தி.மு.க. அரசு நிச்சயம் தடுக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

    மதுரை:

    மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் தலைமை தாங்கினார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரை பீ.பீ.குளத்தில் முக்கிய சாலை சந்திப்பில் உள்ள பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தை ரூ.55 லட்சம் மதிப்பில் மாநகராட்சி விரைவில் விரிவுப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    நாடு முழுவதும் இந்தியை ஒரே மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்தாகத்தான் பார்க்க வேண்டும். மத்திய அரசின் கருத்தாக இதனை நாம் பார்க்கக்கூடாது.

    தமிழகத்தில் இந்தியை எதிர்த்தும் போராட்டம் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்தி திணிப்பை எதிர்த்தனர்.

    அதே வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் இந்தி திணிப்பை நிச்சயம் தடுத்து நிறுத்தும்.

    ஒரு மொழியை கற்பது வேறு, திணிப்பது வேறு. எனவே எந்த மொழியை திணித்தாலும் அதனை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி முதன்மை பொறியாளர் அரசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஜெயவேல், முத்துக்குமார், புதூர் அபுதாகீர், ஒச்சாத்தேவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×