search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    புகழேந்தி விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- டி.டி.வி.தினகரன்

    புகழேந்தி விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சனம் செய்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    மேலும் 14 ஆண்டுகள் முகவரி இல்லாமல் இருந்த டி.டி.வி.தினகரனை நான் தான் அடையாளம் காட்டினேன் என்றும், ஜெயலலிதா இறந்தபோது கூட அவர் அங்கு இல்லை என்றும் புகழேந்தி அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    இதன் மூலம் புகழேந்தி தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதும், அக்கட்சியில் இருந்து விலகும் மனநிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. புகழேந்தியின் பேச்சுக்கு அ.ம.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும், புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மன நிலையில் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனிடம், புகழேந்தி பேசிய வீடியோ விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அ.ம.மு.க.வில் இருந்து சிலர் விலகி செல்கிறார்கள். அவர்கள் சொந்த விருப்பத்திற்காகவும், சுயநலத்துக்காகவும் செல்கிறார்கள். அதை நான் துரோகம் என்று சொல்லமாட்டேன்.

    புகழேந்தி

    புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. அதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நடக்கும் சம்பவங்களை ஊடகங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தங்க தமிழ்ச்செல்வன், என்னை விமர்சனம் செய்து பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×