search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் பலி
    X
    மாணவன் பலி

    உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் உடலை பரிசோதனைக்கு பின் வாங்க மறுத்து அவனது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ளது நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கல்கிணற்று வலசை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கார்த்தீசுவரன் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர். இறந்த மாணவனின் உடல் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடலை வாங்குவதற்கு அவனது பெற்றோர்களும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை நீடித்த இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் தாசில்தார் தமிழ்செல்வி, ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் மற்றும் போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் சார்பில், “மாணவனை இழந்து வாடும் அவனுடைய பெற்றோருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். கல்வித்துறை சார்பிலும், அரசு சார்பிலும் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருந்தாலும் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றகோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தாசில்தார் தமிழ்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக கலெக்டர் வீரராகவராவ் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், அரசு வேலை மற்றும் நிவாரணம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 3 மணி நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக கல்கிணற்றுவலசை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி, உச்சிப்புளி காமராஜர் நகரை சேர்ந்த ஆசிரியர் தமிழரசு ஆகிய 2 பேர் மீதும் மாணவனின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×