search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபக் - தீபா
    X
    தீபக் - தீபா

    ஜெயலலிதா சொத்துகள் தொடர்பான வழக்கு - தீபா, தீபக் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

    ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, வரி பாக்கித் தொகைக்ககாக போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகளை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதம் செய்தார்.

    அவர் தன் வாதத்தில், ‘ஜெயலலிதா தன்னுடைய சொத்துகள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று எந்தவொரு உயிலும் எழுதி வைக்கவில்லை. எனவே, அவரது சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகியாக நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சில சொத்துகள் பொதுமக்களுக்கு சேர வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் போயஸ் கார்டன் வீடு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு, ‘அந்த வீடு தற்போது மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று அரசு தரப்பு வக்கீல் பதில் அளித்தார்.

    அப்போது தீபா தரப்பு வக்கீல், ‘ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது. அதன் பிறகு தீபாவும், தீபக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தை, ‘யுனைட்டர் பிரிவரிஸ்’ நிறுவனம் பராமரித்து வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வங்கியில் ஜெயலலிதா பெற்ற ரூ.2 கோடி கடன், தற்போது வட்டியுடன் ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது’ என்றார்.

    வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஜெயலலிதாவின் வருமானவரி பாக்கி ரூ.40 கோடி உள்ளது. அதற்காக அவரது போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையால் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போயஸ் கார்டன் வீட்டை அளவிட கால தாமதமாகிறது’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து பலரை கைது செய்கிறார்கள். வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. எனவே, வருமான வரித்துறையில் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமே’ என்று கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ‘நாங்கள் வக்கீல்களை நம்பவில்லை என்று எண்ண வேண்டாம். இந்த வழக்கை எல்லோரும் கவனிக்கிறார்கள். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது குறித்து தெரிந்துகொள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் வருகிற வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×