search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைத்திலிங்கம் எம்பி
    X
    வைத்திலிங்கம் எம்பி

    ஜிப்மர் ஊழியர் சம்பள விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும்- வைத்திலிங்கம் கோரிக்கை

    ஜிப்மர் ஊழியர் சம்பள விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது:-

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையானது 1964-ல் அப்போதைய பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு வால் நிறுவப்பட்டது. தற்போது, ஜிப்மர் நிர்வாகத்தில் 230 பேராசிரியர்கள், 360 மருத்துவர்கள், மற்றும் 3,500 செவிலியர்கள், நிர்வாக மற்றும் இதர ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

    2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனையை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்வி நிறுவனமாக மாற்றியமைத்தது. அந்த நேரத்தில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் மருத்துவ பேராசிரியர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் வழங்குவது போன்று ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்தது.

    மேலும், மருத்துவ ஆசிரியர்கள் அல்லாத மற்ற அலுவலர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதற்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அது தன்னுடைய அறிக்கையை 3.8.2016 அன்று சமர்ப்பித்தது. அந்த குழுவானது டெல்லி எய்ம்ஸ்சில் உள்ளது போல் ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் ஊதிய விகிதம் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நியமன விதிகள் ஆகியவை திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

    அதனடிப்படையில் நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்து 26 நிலைகளில் பதவிகள் உத்தேசிக்கப்பட்டு ஜிப்மர் நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுமதி கேட்டு சமர்ப்பித்து இருந்தது. அந்த 26 நிலைகளில் 3 நிலைகளுக்கு மட்டும் மத்திய சுகாதார அமைச்சகம் 10.8.2018 அன்று அனுமதி அளித்துள்ளது. மற்ற பதவிகளுக்கான திருத்தம் மத்திய சுகாதார அமைச்சகத்தில் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

    ஆகையால் மத்திய சுகாதார மந்திரி இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு உடனடியாக நிலுவையில் உள்ள இந்த 23 நிலை பதவிகளுக்கான ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க அனுமதி அளிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.

    Next Story
    ×