search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    மாநிலங்களவைத் தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல்

    மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மாநிலங்களவை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சியான பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமை கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொ.மு.ச.வை சேர்ந்த சண்முகம், வக்கீல் வில்சன் ஆகிய இருவரும் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வைகோ மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு போட்டியிடுவதில் சிக்கல் இல்லை என்பது நேற்று தெரிய வந்தது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று மதியம்  மாநிலங்களவையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாநிலங்களவை

    அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க. போட்டியிடும். 3 இடங்களில், 2 இடங்களுக்கு கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

    1. முகமது ஜான், (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர், வேலூர் கிழக்கு மாவட்டம்)

    2. சந்திரசேகரன் (மேட்டூர் நகரக் கழகச் செயலாளர் சேலம் புறநகர் மாவட்டம்)

    சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள சந்திரசேகரன் (வயது 65). மேட்டூர் நகர செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். மேலும் மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ரேணுகா. இவர் மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சந்திர சேகரனுக்கு டாக்டர் பூர்ணிமா, ரேகா என்ற 2 மகள்களும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.

    இதில் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் அன்பு மணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. அவரது பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனர். அன்றுடன் வேட்பு மனுதாக்கலுக்கான கால அவகாசம் முடிகிறது.

    மறுநாள் 9-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 11-ந்தேதி கடைசி நாளாகும்.

    தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க கூட்டணி சார்பில் 3 வேட்பாளர்களும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சுயேட்சைகளின் மனுக்கள் 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். 11-ந் தேதி மனுக்கள் வாபஸ் முடிந்ததும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்படும்.

    Next Story
    ×