search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே தடுப்பு கட்டையில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது- 20 பேர் படுகாயம்
    X

    விக்கிரவாண்டி அருகே தடுப்பு கட்டையில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது- 20 பேர் படுகாயம்

    விக்கிரவாண்டி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விக்கிரவாண்டி:

    சென்னையில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை சங்கராபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 31) என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக முத்துவேல் (40) இருந்தார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பேரணி கூட்டுரோடு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் முத்துவேல் மற்றும் பஸ்சில் பயணம் செய்த உளுந்தூர்பேட்டை யை சேர்ந்த சத்தியா (23), கஸ்தூரி (32), சங்கீதா (23), சென்னை பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி (26), மகேஸ்வரி (38), கள்ளக்குறிச்சியை சேர்ந்த பத்மபிரியா (31), பாலமுருகன் (28), மங்கலம்பேட்டையை சேர்ந்த சேகர் (41), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த மனோஜ் குமார் (43) உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்துக்குள்ளான பஸ்சின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் சிக்கிய பஸ் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. உடனே கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்துகுறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×