search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே போர்வெல் லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    திண்டுக்கல் அருகே போர்வெல் லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    திண்டுக்கல் அருகே போர் வெல் லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆத்தூர்:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் குடிநீருக்காக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி சின்னாளபட்டி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆதிலட்சுமிபுரத்தில் சின்னாளபட்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக போர்வெல் லாரி இன்று வந்தது.

    இதனை அறிந்ததும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஒன்றுகூடினர். இங்கிருந்து தண்ணீர் எடுத்தால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்படும். ஏற்கனவே கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆழ்துளை கிணறு அமைத்தால் நீர்மட்டம் குறைந்து குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே எடுக்கப்படும் நீரை தங்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    சின்ளாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, தலைமை எழுத்தர் லட்சுமி, செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதமன், சின்னப்பன் ஆகியோர் பேசி குடிநீரில் ஒரு பகுதி ஆதிலட்சுமிபுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×