search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியது
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியது

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியது.
    சேலம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் அணையின் நீர்மட்டம் இன்று காலை 57 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் மங்களூரு, குடகு, உடுப்பி கார்வார் உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த மழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    124.8 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.38 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் கர்நாடக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் பட்சத்தில் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    கேரளாவில் வயநாடு மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் தென் கடலோர மாவட்டங்களில் இன்னும் ஒரு வாரத்திற்குள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன மழை பெய்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் தருவாயில் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலி குண்டுலுவை கடந்து ஒகேனக்கலை வந்தடையும். ஒகேனக்கல் காவிரி வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும் போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 722 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 733 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 45.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 45.47 அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணை மூலம் டெல்டா பகுதிக்குட்பட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறுவை, தாளடி பயிர்களுக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாக இருக்கும் பட்சத்தில் பருவ மழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணை வரலாற்றில் தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு இந்தாண்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் முப்போக சாகுபடி விவசாயிகளின் கனவாகவே மாறி வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு வழக்கத்தை விட தாமதமாக ஜூலை மாதம் 19-ந் தேதி காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது. பின்னர் நீர்வரத்து 2 லட்சம் கன அடி வரை அதிகரித்ததால் அணை கடந்தாண்டு 4 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×