search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தி மொழி திணிப்பு - வைகோ, தினகரன், திருச்சி சிவா கண்டனம்
    X

    இந்தி மொழி திணிப்பு - வைகோ, தினகரன், திருச்சி சிவா கண்டனம்

    மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்.

    ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.

    பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

    கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.



    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை ஒரு பாடமாக கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு புதிய கல்வி குழு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழகத்தில் எந்த காலத்திலும் இந்தியை கால் ஊன்ற தி.மு.க. அனுமதிக்காது. இங்கு தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது.

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க நினைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மத்திய அரசு தெரிந்து கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

    இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியை திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து விடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி விடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×