search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் திட்டம் புரட்சிகரமானது - திருநாவுக்கரசர்
    X

    ராகுல் திட்டம் புரட்சிகரமானது - திருநாவுக்கரசர்

    ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #RahulGandhi #Congress #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளை வாழவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை வெளியாக உள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும்.

    இது மோடி ஏமாற்றியதை போல் அல்ல, தீர ஆராய்ந்து செயல்படுத்தக்கூடிய அம்சங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி இந்தத் திட்டத்தை எடுத்துள்ளார். மோடி கோடீஸ்வரர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். ஆனால் ராகுல் காந்தி ஏழைகளுக்கு உதவுபவர். இதுதான் பாஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு.

    ராகுல் காந்தி பிரதமரானதும் இந்தத் திட்டம் தான் முதலில் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் மோடி அலை ஓய்ந்துவிட்டது.

    ராகுல் அலை தங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கான கதவை மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால் படி தாண்டி செல்ல யாரும் முன்வரவில்லை. நாட்டில் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் 132 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கப்போவதில்லை.

     


     

    தமிழக காங்கிரஸில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கொண்டு வருவதாக பா.ஜனதா கட்சி கூறுகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை உருவாக்கியது காங்கிரஸ் அரசு என்பதை பெருமையுடன் சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் மாநில துணைத்தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், கிளியனூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகர், வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் சஞ்சய்தத் முன்னிலையில் தமிழக மகளிர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவி ஜான்சிராணி மற்றும் நிர்வாகிகள் மைதிலி தேவி, மீனாட்சி அன்பரசு, சுசிலா கோபாலகிருஷ்ணன், கோவை கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #RahulGandhi #Congress #Thirunavukkarasar

    Next Story
    ×