search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? - ஜாக்டோ-ஜியோ கேள்வி
    X

    நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? - ஜாக்டோ-ஜியோ கேள்வி

    நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேள்வி எழுப்பினர். #JactoGeo #MLAsSalary

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

    இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜாக்டோ- ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு தரப்பில் அடக்கு முறைகள் ஏவப்படுவதும், புளுகுமூட்டைகள் அவிழ்த்து விடப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசும், அமைச்சர்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் உள்ளனர்.

    அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500 சம்பளத்தில் 28-ந்தேதி முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பயமுறுத்த அறிக்கை விட்டு விட்டு ரூ.7,500-க்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் அதை இப்போது ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

     


    ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும் அவர்களால் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தக்க முறையில் பாடங்களை போதிக்க முடியாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிவர். ஆனால் அரசோ ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை நேரடியாக அழைத்து பேசுவதை கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது.

    அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரும் இந்த அரசுதான் நாங்கள் போராடாமல் எங்கள் கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று பலமுறை கெஞ்சியபோது அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் 110 சதவீத ஊதிய உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டது. ரூ.50 ஆயிரம் ஆக இருந்த எம்.எல்.ஏ. சம்பளத்தை ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தியபோது மட்டும் அரசின் நிதி நிலைமை செழிப்பாக இருந்ததா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    30 ஆண்டுகளாக அரசில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட்டு வரும் பயனளிப்பு ஓய்வூதியத்தை பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றிவிட்ட இவர்கள், ஒருமுறை எம்.எல்.ஏ.க்களாகவோ, எம்.பி.க்களாகவோ இருந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதை மட்டும் பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றவில்லை.

    ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்களுக்கு தேவையானதை கஜானாவில் இருந்தும். கருவூலத்தில் இருந்தும் சுரண்டி எடுத்துக் கொண்டு விட்ட பின் கஜானா காலியாக இல்லாமல் வேறெப்படி இருக்கும்.

    அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார். அம்மா எந்த காலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்துவோம் என்று கூறவில்லை. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று தான் கூறியுள்ளார் என்கிறார். அவர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கண்ணாடி போட்டு கொஞ்சம் படித்துப் பார்த்திருந்தால் அந்த பொய்யான அறிக்கையை விட்டிருக்க மாட்டார்.

    நியாயமான முறையில் போராடுபவர்களை நேர்மையான முறையில் அழைத்து பேசி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசு தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், ஆசிரியர்களையும் எதிரிகளைப் போல் பாவிப்பதையும் அடிமைகள் போல் நடத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டும்.

    வெறும் அறிக்கைகளும், புள்ளி விவரங்களும், மாற்று ஏற்பாடுகளும் அடக்கு முறைகளும், நசுக்கிவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #JactoGeo #MLAsSalary

    Next Story
    ×