search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo Struggle"

    மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #Tamilisaisoundararajan #JactoGeo
    திருப்பூர்:

    பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார்.

    இதற்கான பொதுக்கூட்ட மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பாஸ்போர்ட்டு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

    இதனால் மோடி ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதி திருப்பூர் வரும் மோடி ஏராளமான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்திற்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்,ரவிசங்கர் பிரசாத், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்தியநாத் ஆகியோர் வருகிறார்கள்.

    இதனால் வாக்குச்சாவடி அளவில் பாரதிய ஜனதாவிற்கு பலன் அதிகரிக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இதில் தமிழகத்தின் பங்கு நிச்சயம் அதிகம் இருக்கும்.

    எதிர்கட்சிகள் விளம்பரத்துக்காக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு பெண்களின் படிப்புக்காக செலவழித்து உள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் 10 லட்சம் போலி ரேசன் கார்டுகள் கண்டறியப்பட்டு உள்ளது. பல லட்சம் போலி லைசென்ஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் 10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

    கடந்த 1971-ம் ஆண்டு வறுமையே வெளியேறு என்ற கோ‌ஷத்துடன் தான் இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை.

    ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ராகுல் காந்தி கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. மோடி தொடங்கி வைத்த வங்கி கணக்கில் தான் ராகுல் பணம் போடுவதாக சொல்கிறார்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்து விட்டு பின்னர் இது குறித்து ராகுல் பேசட்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் 800 விவசாயிகள் தான் பயன் பெற்றனர்.

    மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என தெரியாமல் அவர் பதட்டத்துடன் இருக்கிறார்.

    தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். கூவத்தை சுத்தப்படுத்துவோம் என கூறினார்கள். ஆனால் அதனை செய்யவில்லை.

    தற்போது மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து நடத்துகிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.



    மு.க.ஸ்டாலின், வைகோ, காங்கிரஸ் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது. அவர்களை இலங்கை சம்பவத்தை கேட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேறுபாடு உள்ளது.

    தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    நான் கொடுக்கும் அறிக்கை, பேட்டியை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சரியாக படிக்காமல் பேசி வருகிறார். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசினேன்.

    அதற்கு திருநாவுக்கரசர் மற்ற 30 தொகுதிகளை விட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் 10 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தான் நடைபெற்றது.

    அந்த 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என தான் நான் பேசினேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ரூ. 1300 கோடி மத்திய மந்திரி சபையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Tamilisaisoundararajan #JactoGeo
    நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேள்வி எழுப்பினர். #JactoGeo #MLAsSalary

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

    இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜாக்டோ- ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு தரப்பில் அடக்கு முறைகள் ஏவப்படுவதும், புளுகுமூட்டைகள் அவிழ்த்து விடப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசும், அமைச்சர்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் உள்ளனர்.

    அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500 சம்பளத்தில் 28-ந்தேதி முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பயமுறுத்த அறிக்கை விட்டு விட்டு ரூ.7,500-க்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் அதை இப்போது ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

     


    ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும் அவர்களால் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தக்க முறையில் பாடங்களை போதிக்க முடியாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிவர். ஆனால் அரசோ ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை நேரடியாக அழைத்து பேசுவதை கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது.

    அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரும் இந்த அரசுதான் நாங்கள் போராடாமல் எங்கள் கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று பலமுறை கெஞ்சியபோது அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் 110 சதவீத ஊதிய உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டது. ரூ.50 ஆயிரம் ஆக இருந்த எம்.எல்.ஏ. சம்பளத்தை ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தியபோது மட்டும் அரசின் நிதி நிலைமை செழிப்பாக இருந்ததா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    30 ஆண்டுகளாக அரசில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட்டு வரும் பயனளிப்பு ஓய்வூதியத்தை பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றிவிட்ட இவர்கள், ஒருமுறை எம்.எல்.ஏ.க்களாகவோ, எம்.பி.க்களாகவோ இருந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதை மட்டும் பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றவில்லை.

    ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்களுக்கு தேவையானதை கஜானாவில் இருந்தும். கருவூலத்தில் இருந்தும் சுரண்டி எடுத்துக் கொண்டு விட்ட பின் கஜானா காலியாக இல்லாமல் வேறெப்படி இருக்கும்.

    அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார். அம்மா எந்த காலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்துவோம் என்று கூறவில்லை. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று தான் கூறியுள்ளார் என்கிறார். அவர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கண்ணாடி போட்டு கொஞ்சம் படித்துப் பார்த்திருந்தால் அந்த பொய்யான அறிக்கையை விட்டிருக்க மாட்டார்.

    நியாயமான முறையில் போராடுபவர்களை நேர்மையான முறையில் அழைத்து பேசி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசு தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், ஆசிரியர்களையும் எதிரிகளைப் போல் பாவிப்பதையும் அடிமைகள் போல் நடத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டும்.

    வெறும் அறிக்கைகளும், புள்ளி விவரங்களும், மாற்று ஏற்பாடுகளும் அடக்கு முறைகளும், நசுக்கிவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #JactoGeo #MLAsSalary

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #JactoGeo

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காலையில் கைது செய்யப்படும் அவர்கள் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுகின்றனர். இந்த போராட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடுவோர்களை உடனடியாக பணிக்கு செல்லவேண்டும். இல்லையென்றால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது.

    அதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனைஅறிந்த ஜாக்டோ-ஜியோ திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் 10 பேர் திண்டுக்கல் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.

     


    அங்கு சென்ற போலீசார் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிர சாலைப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராமன், ஊராட்சி செயலர்கள் பெருமாள், கதிரேசன், வருவாய் ஆய்வாளர் முகமதுஅப்துல்காதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான இவர்கள் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நிர்வாகிகள் கைது செய்யப்படுவதை அறிந்த ஜாக்டோ-ஜியோ பொருப்பாளர்கள், அரசு ஊழியர்சங்கம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வீடுகளில் தங்குவதை தவிர்த்து தலைமறைவாக உள்ளனர்.

    இதற்கிடையில் கைதான ஆசிரியர்கள் வீரபத்திரபாபு, ஜேம்ஸ், சேவியர், ராஜேந்திரன், பே.செல்லமுத்து, பா.செல்லமுத்து, மருதுமாருகன், முருகேசன், சரவணன் ஆகிய 9 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #JactoGeo

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். #JactoGeo

    விழுப்புரம்:

    புதிய ஓய்வுஊதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

    விழுப்புரத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தை நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 170 பேர் மீதும், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்திய 150 பேர் மீதும் போலீசார் வழக் குபதிவு செய்தனர்.

    இதேபோல் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர்.

    இந்நிலையில் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,065 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்ப அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நேற்று பணிக்குவராத 381 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    அதில், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் பிற துறைகளிலும் பணிக்கு வராதவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #JactoGeo

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo

    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்கபள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன. #JactoGeo

    ×