search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட ஜெகதீசன்-விலாசினி
    X
    கொலையுண்ட ஜெகதீசன்-விலாசினி

    ஆவடியில் கணவன்-மனைவி அடித்து கொலை: போலீசார் விசாரணை

    சென்னை ஆவடியில் நகை மற்றும் பணத்துக்காக கணவன், மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AvadiMurder
    திருநின்றவூர்:

    சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் வாங்கி அதில் பண்ணை வீட்டை கட்டி குடியேறினார்கள். முன் பகுதியில் வீட்டை கட்டி பின் பகுதியில் பெரிய தோட்டத்தையும் அமைத்திருந்தனர்.

    ஜெகதீசனுக்கு 65 வயது ஆகிறது. விலாசினிக்கு 60 வயது. வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு இருவரும் ஆட்களை நியமித்து இருந்தனர். கணவன்-மனைவியாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தனர்.

    கடந்த 3 மாதமாக வீட்டில் வேலை செய்து வந்த இருவர் திடீரென நின்றுவிட்டனர். இதனால் 10 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவை சேர்ந்த கணவன்-மனைவியை வேலைக்கு சேர்ந்தனர்.

    இன்று காலையில் நீண்ட நேரமாகியும் ஜெகதீசன், விலாசினி இருவரும் வெளியில் வரவில்லை. வேலையாட்களையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது கணவன்- மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

    இணை கமி‌ஷனர் விஜய குமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஜெகதீசனும், விலாசினியும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நகை-பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இருவரும் துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு.

    சுமார் 50 பவுன் நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஜெகதீசனையும், விலாசினியையும் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு சேர்ந்த ஆந்திர தம்பதி வீட்டில் இல்லை. இருவரும் மாயமாகி விட்டனர். நகை- பணத்துக்காக அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையுண்ட ஜெகதீசன், விலாசினி இருவரின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யாருடன் பேசி உள்ளனர்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே கணவன்- மனைவியை கொலை செய்ததாக கருதப்படும் ஆந்திர தம்பதி யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    குற்றவாளிகளை பிடிக்க ஆந்திர மாநிலத்துக்கும் தனிப்படை விரைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    தனியாக வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விலாசினி, ஜெகதீசனுக்கு 2-வது மனைவி ஆவார். சமீபத்தில்தான் அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பணி ஓய்வு பணம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பணம் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

    ஜெகதீசனின் முதல் மனைவி பெயர் சுகுமாரி. இவர் அண்ணாநகரில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். விலாசினிக்கு குழந்தைகள் இல்லை. #AvadiMurder
    Next Story
    ×