search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்லிங்மலை கிராமத்தில் இன்றுமறியலில் ஈடுபட்ட மக்களையும், ஒருபிரிவினர் உண்ணாவிரதம் இருந்து வருவதையும் காணலாம்.
    X
    சிட்லிங்மலை கிராமத்தில் இன்றுமறியலில் ஈடுபட்ட மக்களையும், ஒருபிரிவினர் உண்ணாவிரதம் இருந்து வருவதையும் காணலாம்.

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை: கிராம மக்கள் மறியல் போராட்டம்

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் ஆகியோரின் மகள் சவுமியா (வயது17). பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த சவுமியா கடந்த 5-ந்தேதி இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றார்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழித்து விட்டனர். அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து அழுத்தினார்கள். பின்னர் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசுக்கு எதிராக 2-வது நாளாக போராட்டம் நடத்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இதனால் அண்ணாமலை மற்றும் உறவினர்கள் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1077க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு போனில் பேசி மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் புகார் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து 6-ந்தேதி அன்று தான் மாணவியை நேரில் வரவழைத்து அவரிடம் புகார் பெற்றுள்ளனர். ஆனால் மாணவியை கற்பழித்ததாக புகார் வாங்காமல் கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் வாங்கி உள்ளனர். மாணவியும், பெற்றோர்களும் தாமதமாக வந்து புகார் கொடுத்ததாகவும் எழுதி வாங்கி உள்ளனர்.

    கற்பழிப்பு புகார் கூறப்பட்ட 2 வாலிபர்களையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தையே மறைத்து விட்டனர் என்று போலீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், கற்பழிப்பு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம் என்றும் கூறி மாணவியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளனர்.

    அங்கு மாணவிக்கு காது வலி இருக்கிறது என்றும், மூச்சு திணறலால் அவதிப்படுகிறார் என்றும் கூறி விட்டு கற்பழிப்பு குறித்து டாக்டரிடம் போலீசார் எதுவும் கூறவில்லை.

    சிகிச்சை அளித்த பிறகு அந்த மாணவி சவுமியாவை தொப்பூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு வைத்து தான் மாணவியின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் கற்பழிப்பு குற்றவாளிகள் சதீஷ், ரமேஷ் ஆகியோரை படத்தில் காணலாம்.

    மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

    மாணவி இறந்த பிறகு தான் அவர் கற்பழிக்கப்பட்ட சம்பவமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    மாணவி மற்றும் அவரது தந்தை கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவியின் உடலையும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    மாணவியின் சொந்த ஊரான சிட்லிங் கிராமத்திலும் நேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடக்கிறது. மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    சிட்லிங் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் நேரில் வர வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. வருவாய்த்துறை அல்லது நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இதனால் சிட்லிங் கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    உதவி கலெக்டர் சிவன் அருள், தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய தாவது:-

    மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்லிங் கிராமத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. அந்த சம்பவங்களை போலீசார் மறைத்து விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் மிரட்டுகிறார்கள்.

    மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வி‌ஷயத்தில் போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. எனவே ஆர்.டி.ஓ. அல்லது டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த வேண்டும் . நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்களும் தப்பிஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கும் சம்பவம் தொடர்பாக போலீசார் 5 நாட்களுக்கு பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    Next Story
    ×