search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையால் அதிகாரிகள் கலக்கம்
    X

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையால் அதிகாரிகள் கலக்கம்

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்னர்.

    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. சென்னை உள்பட 24 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மொத்தம் ரூ.44 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.80 ஆயிரமும், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ரூ.52,600-ம் சிக்கியது.

    சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஒருவரின் அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. ஸ்ரீபெரும்புதூர் பத்திரபதிவு அலுவலகத்தில் ரூ.28,500 பணம் கைப்பற்றப்பட்டது.

    வேலூரில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் பணம் கிடைத்தது. இதே போல தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் பணமும், தென்காசி ஆர்.டி.ஓ. ஆபிசில் ரூ.87 ஆயிரமும் சிக்கியது.

    மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்ததும் யாரும் அவரவரிடத்தில் அப்படியே நிற்க வேண்டும் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்த பணத்தை ஜன்னல் வழியாகவும், அலுவலக மேஜையின் கீழேயும் வீசி எறிந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர்.

    ரூ.84ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அலுவலக ஊழியர் 8 பேர், இடைத்தரகர்கள் 25 பேரிடமும் 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேனி வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.14 ஆயிரத்து 680 பறிமுதல் செய்யப்பட்டது.


    கடலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புரோக்கர்கள் பையில் வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.

    விழுப்புரம் பத்திரபதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் 4 பேர் தங்கள் பைகளில் 88 ஆயிரத்து 140 ரூபாய் வைத்திருந்தனர். அந்த பணத்துக்கு அவர்கள் உரிய கணக்கு காட்டவில்லை. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுனர் உரிமம் பெறவும் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அவர்களிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைவிட கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

    அதன்பேரில் அங்கு நடந்த சோதனையில் ரூ.44 ஆயிரத்து 500 பிடிபட்டது. பரிசு பொருட்களும் சிக்கின.

    வேலூர்ஆவின் பொதுமேலாளர் முரளிபிரசாத் காரில் இருந்து ரூ.11 லட்சமும், செயல் பொறியாளர் சேகரிடம் ரூ.2.85 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தோட்டத்தில் வீசப்பட்ட ரூ.1 லட்சம் பணமும் சிக்கியது இதன் மூலம் இங்கு 14.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொது மேலாளர் முரளிபிரசாத், சேகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.10 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 24 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தீபாவளி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்னர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனையில் அரசு அலுவலகங்களில் கைமாற இருந்த லட்சக்கணக்கான லஞ்ச பணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×