search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அதிமுக தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு
    X

    தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அதிமுக தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு

    தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் அ.தி.மு.க.வினர் தற்போதே தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும். அதற்காக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடந்த முறை பெற்ற வாக்கைவிட கூடுதல் வாக்குகளை நாம்பெற வேண்டும் என்றார்.

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த ஏ.கே.போஸ் சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். ஆனாலும் மக்கள் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தந்தார்கள். இப்போது அம்மா நம்மோடு இல்லை என்றாலும் விண்ணில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டிருக்கிறார். அவரது ஆசியால் அ.தி.மு.க. மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி வாகைசூடும்.

    நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆர்.கே.நகரில் அசந்ததுபோல திருப்பரங்குன்றத்தில் அசரமாட்டோம்.


    தங்கத்தமிழ்செல்வன் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை பார்த்து சவால் விடுகிறார். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நாம் (அ.தி.மு.க. வினர்) அனைவரும் அவர்கள் பக்கம் வர தயாரா? என கேட்கிறார். மேலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவதாகவும் கூறுகிறார். அவர் இருக்கும் இடம் அப்படி. அவர் நம்மை பார்த்து சவால் விடவில்லை என்றால் அவர் அங்கே இருக்க முடியாது.

    தங்கத்தமிழ்செல்வனின் சவாலை நாங்களும் ஏற்கிறோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறப்போவது உறுதி. எனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு இங்கே வந்து சேருவதைவிட தேர்தலுக்கு முன்பே தங்கத்தமிழ்செல்வன் போன்றவர்கள் வந்து சேர்ந்து விட்டால் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும்.

    இந்த இயக்கம் ஏழை- எளிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம்.

    இந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்தமுடியாது. அப்படி வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள். இதுதான் வரலாறு.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    Next Story
    ×