search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரண பொருட்களுடன் சென்ற சீமானிடம், கேரள போலீசார் 4 மணி நேரம் கெடுபிடி
    X

    நிவாரண பொருட்களுடன் சென்ற சீமானிடம், கேரள போலீசார் 4 மணி நேரம் கெடுபிடி

    கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். #Seeman
    சென்னை:

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அதிக அளவில் சென்றுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பிலும் கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக குடிநீர், உடைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் திரட்டப்பட்டன. ரூ.15 லட்சம் மதிப்பிலான இந்த நிவாரண பொருட்களுடன் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் கேரளா சென்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரி முகாமுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பினர்.

    நாம் தமிழர் கட்சியினர் சென்ற வாகனங்களில் பிரபாகரன் படத்துடன் கூடிய பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மடக்கினர். கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் சீமான் அங்கு விரைந்து சென்றார். போலீஸ் நிலையத்தில் வைத்து சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் கடும் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். நீங்கள் கொண்டு வந்திருக்கும் உணவு பொருட்களின் மீது நம்பகத்தன்மை இல்லை என்றும், பிரபாகரன் படத்தை வைத்திருப்பதால் அனைவரும் விடுதலைப்புலிகள் தானோ? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் கூறியதுடன், இது போன்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதனை கேட்டு சீமான் அதிர்ச்சி அடைந்தார். நாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களை நன்றாக பரிசோதனை செய்யுங்கள். அதுவரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறினார். பின்னர் 4 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீமான் கூறியதாவது:-

    நிவாரண பொருட்களை கொண்டு செல்ல, அங்குள்ள பெண் வட்டாட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தோம்.

    கோட்டயத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் உணவு பொருட்களை கொண்டு சென்றோம். அம்மாநில காவலர்களே பொருட்களை இறக்குவதற்கு உதவி செய்தனர். ஒத்துழைப்பும் அளித்தனர். கொண்டு சென்ற பொருட்களையெல்லாம் இறக்கும் வரையில் 2½ மணி நேரம் நானும் அங்கேயே இருந்தேன். பின்னர் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டோம்.

    இதன் பிறகுதான் கட்சியினரை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகே நான் அங்கு சென்றேன்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, எங்களுக்கு மேலிட உத்தரவு. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம் என்று கூறி விசாரித்தனர். 7 மணி நேரம் பயணம் செய்து சாப்பிடாமல் உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம் என்று தெரிவித்தோம். அதற்கு தமிழர்கள் தான்அதிக அளவில் உதவி இருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர். யாருடைய தூண்டுதலின் பேரிலோ தான் போலீசார் அவமானப்படுத்தும் விதத்தில் எங்களிடம் நடந்து கொண்டனர்.

    புலிக் கொடியையும், பிரபாகரன் படத்தையும் நீங்கள் எடுத்து வந்திருப்பதால் விசாரிக்க சொல்லி உத்தரவு என்று கூறிய போலீசார், எனது முகவரி, செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    நாங்கள் செல்லும் போது சேவாசங்கத்தினர் சிலர் பொருட்களை தங்களிடம் கொடுக்குமாறு கூறினர். நாங்கள் உரிய அதிகாரிகளிடம்தான் வழங்குவோம் என்று கூறி எடுத்துச் சென்று விட்டோம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
    Next Story
    ×