search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் விடிய விடிய கொட்டிய மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரியில் விடிய விடிய கொட்டிய மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு விடிய விடிய கொட்டி தீர்த்தது. கன்னிமார், சுருளோடு, புத்தன் அணை பகுதியில் இரவு கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையினால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்னிமாரில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவானது. இரணியல், ஆணைக்கிடங்கு, கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குளச்சல், முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இன்று காலையிலும் மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். திருவட்டார், தக்கலை, மார்த்தாண்டம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் இன்று காலையில் கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினாலும் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை நீடித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.10 அடியாக இருந்தது. அணைக்கு 1,466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 762 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியது. அணைக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.60 அடியாக இருந்தது. அணைக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கேற்ப கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தோவாளை சானல், அனந்தனாறு சானல், புத்தனாறு சானல்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இது குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் கூறுகையில், அணைகளின் நீர்மட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மழை தொடர்ந்து பெய்தால் பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து இன்று மாலை உபரிநீர் வெளியேற்றப்படும்.

    எனவே குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்றிற்கு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.

    செண்பகராமன்புதூர், தோவாளை, தடிக்காரன் கோணம் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-46.2, பெருஞ்சாணி-39, சிற்றாறு-1-52, சிற்றாறு-2-31, மாம்பழத்துறையாறு-30, திற்பரப்பு-39, நாகர் கோவில்-10.8, பூதப் பாண்டி-22.4, சுருளோடு- 43.2, கன்னிமார்-54.2, ஆரல்வாய் மொழி-6, பால மோர்-47.2, மயிலாடி-9.6, கொட்டாரம்-22.6, குருந்தன் கோடு-14.6, இரணியல்-19.6, ஆணைக்கிடங்கு-28.2, குளச்சல்-14, அடையாமடை- 23, கோழிப்போர்விளை-31, முள்ளங்கினாவிளை-36, புத்தன் அணை-41.
    Next Story
    ×