search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அற்பமான காரணங்களை கூறி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பதா? திமுக வாதம்
    X

    அற்பமான காரணங்களை கூறி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பதா? திமுக வாதம்

    அற்பமான காரணங்களைக் கூறி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க அரசு மறுப்பதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே செய்ய நிலம் ஒதுக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இரவோடு இரவாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர், வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் இருந்த சட்ட சிக்கல்களை போக்கும் வகையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்ட 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அத்துடன் திமுக மனு மீதான விசாரணையை தொடங்கினர். அப்போது இந்த வழக்கில் இன்றை தீர்ப்பு வழங்கப்போகிறீர்களா? என நீதிபதிகளிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டார். நேற்றைய மனு விவரங்கள் மற்றும் அரசு பதில் மனு விவரங்களை பதிவு செய்த பிறகு விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேட்க, எந்த அவசரமும் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

    இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அப்போது தலைமை செயலாளரின் முடிவை பத்திரிகை செய்தியா, உத்தரவா? என்று பார்க்க வேண்டியதில்லை என்று கூறினார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் என்பது வேறு திராவிட சித்தாந்தம் என்பது வேறு எனவும் அவர் கூறினார். 

    ‘எனது வாழ்வும் ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். 1988ம் ஆண்டே இடக்கம் செய்வதற்காக பகுதியாக அண்ணா சமாதி பகுதி அறிவிக்கப்பட்டது. நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் சட்ட சிக்கல்கள் இல்லை. அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது பாரபட்சம் காட்டுவதாகும். மக்கள் மனம் புண்படும்.’ என்றும் திமுக வாதிட்டது.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி அரங்கத்தில் திரண்டுள்ள தொண்டர்களும், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi #MarinaMemorial #Marina4Karunanidhi

    Next Story
    ×