search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் குற்றம், போக்சோ சட்டம் பற்றி மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போலீசார்
    X

    பாலியல் குற்றம், போக்சோ சட்டம் பற்றி மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போலீசார்

    பாலியல் குற்றம், போக்சோ சட்டம் பற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    ராமநாதபுரம்:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வன்கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் பஞ்சாயத்து என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமீப காலங்களாக நடைபெற்றுவரும் கொடூர சம்பவங்களால் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள போக்சோ எனப்படும் சட்டத்தில் கடுமையான தண்டனைகளை சேர்த்து தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்காரணமாக தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாலியல் தொந்தரவு எந்தெந்த வகைகளில் ஏற்படுகிறது என்பதை விளக்கி கூறும் வகையிலும் அதனை தடுப்பது குறித்தும், உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்தும் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாலையில் ஒருமணி நேரம் பாலியல் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றி பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வ ருகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்து வதோடு, பாலியல் தொல்லைகள் எந்தெந்த வழிகளில் யார் மூலம் ஏற்படுகிறது என்பதை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளக்கி கூறுகின்றனர்.

    மேலும், போக்சோ சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்தும் தெளிவாக விளக்கி கூறி வருகின்றனர். நாள்தோறும் ஒவ்வொரு பள்ளியாக சென்று பாலியல் குற்றங்கள் குறித்து விளக்கி கூறி வருவதோடு அதுதொடர்பான கேள்விகளை மாணவிகளிடம் கேட்டு தயார்படுத்தி வருகின்றனர். இதனை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தி பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    Next Story
    ×