search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் பாராட்டு - தமிழகத்தில் துளிர்விடும் அரசியல் நாகரீகம்
    X

    கருணாநிதிக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் பாராட்டு - தமிழகத்தில் துளிர்விடும் அரசியல் நாகரீகம்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி உடல்நலம் மீது அக்கறை செலுத்தும் அ.தி.மு.க. அமைச்சர்கள், ‘‘தமிழுக்காக பாடுபட்டவர்’’ என புகழாரம் சூட்டியிருப்பது அரசியல் வரலாற்றில் வரவேற்பை பெற்றுள்ளது. #Karunanidhi
    சென்னை:

    உடல்நல குறைவு காரணமாக காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வமும் அமைச்சர்களும், கருணாநிதியின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் விரைவில் மீண்டும் தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர்.


    அரசியல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும், எதிரும் புதிருமாக கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் எலியும், பூனையும் போலவே இருந்தனர். 2 கட்சிகளின் நிர்வாகிகளும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும், வணக்கம் சொல்வதற்கு கூட அச்சப்படும் நிலையே காணப்பட்டது.

    ஜெயலலிதாவின் மரணம் அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கையில் இப்போது பெரிய அளவில் வரவேற்கத்தக்க வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் வேறுபாடுகளை மறந்து, நலம் விசாரிப்பது வட மாநிலங்களில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற நிலை காணப்படுவதில்லை. இப்போதுதான் அதனை பார்க்க முடிகிறது.

    கருணாநிதி பூரண நலம் பெறவேண்டும் என்றும், அவருக்காக வேண்டிக் கொள்வதாகவும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் தமிழகத்திலும் அரசியல் நாகரீகம் துளிர் விட்டுள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கருணாநிதியை பெரியவர் என்று குறிப்பிட்டார். கருணாநிதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் விரைவில் பூரண குணம் அடையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறும்போது, கருணாநிதி தமிழுக்காக பாடுபட்டவர். அவரது உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். பெரியார், அண்ணா வழியில் அரசியல் களம் கண்ட கருணாநிதியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. எப்போதுமே காழ்ப்புணர்ச்சி இருந்தது இல்லை என்றும் கூறினார்.

    அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில், திருவாரூரில் இருந்து சென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். அரசியலில் அவரது பயணம் நீண்ட பயணமாகும். மூத்த அரசியல்வாதியான அவர் நலம் பெற வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ, கருணாநிதி நலம் பெற மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள கருணாநிதி நீடூழி வாழ வேண்டும். அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என்றும் தெரிவித்தார்.

    இவரை போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் கருணாநிதியை புகழ்ந்து பேசி இருப்பதுடன் அவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் கூறி உள்ளனர். அ.தி.மு.க. அமைச்சர்களின் இந்த நிலைப்பாடு அரசியல் களத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. #Karunanidhi #KarunanidhiHealth
    Next Story
    ×