search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு
    X

    எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு

    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மேலும் 1,189 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு 10 ஆண்டுகள் எந்தவித புகாரும் இல்லாத ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்றவர்களின் ஜெயில் நடவடிக்கைகள் திருப்தி அளித்தால் மட்டுமே, அவர்களுக்கு தகுந்த ஆய்வுக்குப் பிறகு விடுதலை அளிக்கப்படுகிறது.

    சில ஆயுள் தண்டனை கைதிகள் 20 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு மாநில மருத்துவ குழு பரிந்துரைப்படி விடுதலை செய்யப்படுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பெண்களுக்காக 5 சிறப்பு மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. 10 மாவட்ட சிறைச்சாலைகள், 38 சப்-ஜெயில் ஆண்களுக்காகவும், 8 சப்-ஜெயில்கள் பெண்களுக்காகவும் உள்ளன. பெண்களுக்காக 2 சிறப்பு ஜெயில்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்காக 12 சீர்திருத்த பள்ளிகளும் 3 திறந்தவெளி ஜெயில்களும் உள்ளன.



    தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் மொத்தம் 22 ஆயிரத்து 792 பேரை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த சிறைச்சாலைகளில் 16 ஆயிரம் பேர் உள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வரை 10 ஆண்டு நிறைவு செய்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதில் 60 வயது ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் விடுதலை அளிக்கப்பட்டது.

    இதுவரை தமிழக ஜெயில்களில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த 311 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரும் மாதங்களில் 1,189 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். #MGRcentenaryfunction
    Next Story
    ×