search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
    X

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வ.சின்னக்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊர் 2 பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியாக உள்ளது. இதில் பாகூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் ஆழ்துளை கிணறு உள்ள பாகூர் பஞ்சாயத்துக்குட்ட பகுதிக்கு 2 மணி நேரமும், சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு 1 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதியடைந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×