search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வரை விசாரிக்கும் அதிகாரம் வேண்டும்- ராமதாஸ்
    X

    லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வரை விசாரிக்கும் அதிகாரம் வேண்டும்- ராமதாஸ்

    முதல்-அமைச்சர், அமைச்சர்களும் லோக் ஆயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Lokayukta #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான ஆயுதங்களில் முக்கியமானதாக கருதப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டமுன்வரைவை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது ஆகும்.

    லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்காக சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு காரணம், அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை அல்ல. தமிழகம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தாததற்காக கடந்த ஏப்ரல் மாதம் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அம்மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதிக்குள் லோக் அயுக்தாவை அமைக்க ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதால் தான் வேறுவழியின்றி இத்தகைய நிலைக்கு பினாமி அரசு தள்ளப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற ஆணைக்கு பணிந்து தமிழக அரசு ஏற்படுத்தவிருக்கும் லோக் அயுக்தா பெயரளவில் செயல்படும் பொம்மை அமைப்பாக இருந்து விடக் கூடாது என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் கவலை ஆகும். 21 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கும் போதிலும், அவற்றில் கர்நாடக லோக் ஆயுக்தா தான் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும்.


    மராட்டிய லோக் அயுக்தா தான் எதற்கும் பயன்படாத பலவீனமான அமைப்பு ஆகும். தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் லோக் அயுக்தா கர்நாடகத்தில் இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, மராட்டியத்தில் இருப்பதை விட பலவீனமானதாக இருந்து விடக் கூடாது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கர்நாடகத்தில் இருப்பதைப் போலவே முதல்- அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ஆகியோர் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாடு லோக் அயுக்தாவுக்கு ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக லோக் அயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் வகையில் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட வேண்டும்.

    மாறாக, ஊழல்வாதிகள் தப்பிக்க வசதியாக வலுவற்ற லோக் அயுக்தா அமைக்கப்பட்டால் அதைக் கண்டித்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஊழலில் திளைக்கும் தமிழக அரசு நிர்வாகத்தை ஓரளவாவது சீர் செய்ய வேண்டுமானால் அதற்கு லோக் அயுக்தா அமைப்பு தான் ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. அதனால் தான் தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


    2016-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என்று முதன் முதலில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. அ.தி.மு.க.வும் அதன் தேர்தல் அறிக்கையில் அதே வாக்குறுதியை அளித்திருந்தாலும், ஊழல் ஒழிப்பை விட ஊழல் செய்வதில் தான் பினாமி ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை அதிகம் என்பதால், புதிய அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் லோக் அயுக்தாவை அமைக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களும், முன்னெடுப்புகளும் ஈடு இணையற்றவை. மதுரையில் கடந்த ஆண்டு திசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழு கூட்டத்தில் 2018ஆம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக கடை பிடிக்கவும், லோக் அயுக்தா மற்றும் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி 2018ஆம் ஆண்டில் பா.ம.க. சார்பில் நான் வெளியிட்ட முதல் அறிக்கையும், எனது தலைமையில் நடத்தப்பட்ட முதல் போராட்டமும் லோக் அயுக்தா சட்டமுன்வரைவை நிறைவேற்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது லோக்அயுக்தா சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படுவது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். #Lokayukta #Ramadoss
    Next Story
    ×