search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் குடிநீர் வினியோகத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கவில்லை - எஸ்.பி.வேலுமணி
    X

    கோவையில் குடிநீர் வினியோகத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கவில்லை - எஸ்.பி.வேலுமணி

    கோவை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான உரிமத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கார்த்திக் (தி.மு.க.), எழுந்து கோவையில் குடிநீர் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக வந்த செய்தி குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

    இதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார். வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. குன்றத்தூரில் உள்ள ஒரு நபர் வாட்ஸ்அப்பில் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். தவறான வாட்ஸ்அப் செய்திதான் எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையிலும் இடம் பெற்று இருந்தது என்று பதில் அளித்தார்.

    கோவையில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு தி.மு.க. அரசால் வழங்கப்படவில்லை. அதன் பிறகு மறைந்த ஜெயலலிதா 2013-ல் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து வெளிப்படையான ஒப்பந்தம் பெறப்பட்டதில் அரியானாவைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு ரூ646 கோடி கட்டுமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    5 ஆண்டு காலத்தில் கட்டுமானப் பணியை முடிக்க வேண்டும் என்றும், 21 வருடத்துக்கு இதே நிறுவனம் தொடர்ந்து இயக்கிடவும், பராமரிப்பு செய்திடவும் வருடந்தோறும் மாநகராட்சி மூலம் உரிய கட்டணம் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தொகை 21 வருட காலத்துக்கும் சேர்த்து மொத்தம் ரூ.2,961 கோடி ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ், பழைய மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு புதிய இணைப்புகளை வழங்கியும், பழைய இணைப்புகளை, புதிய இணைப்புகளாக மாற்றியமைத்தும், அனைத்து வீட்டு இணைப்புகளுக்கும் தானியங்கி மீட்டர் பொருத்தியும், பணிகள் செயல்படுத்தப்படும்.

    இந்த குடிநீர்த் திட்டத்தின் கீழ், அதிக அழுத்தத்துடன் வழங்கப்படும் குடிநீர், இரண்டாவது தளம் வரை சென்று, 24 மணி நேரமும் கிடைப்பதற்கு, நுண்ணிய தொழில்நுட்பத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அரசின் ஒப்புதல் பெறப்பட்ட கட்டணமே, குடிநீருக்கான மீட்டர் கட்டணமாக கோவை மாநகராட்சியின் மூலம் வசூல் செய்யப்படும். இதில் நீர்மானி அளவீடு பணி மட்டுமே சூயஸ் நிறுவனம் மூலம் செய்யப்படும்.

    எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளபடி, குடிநீர் கட்டணத்தை நிர்ணயம் செய்தலோ, கட்டணங்களை பட்டியல் தயாரித்து வசூல் செய்யும் உரிமையோ, சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. இப்பணிகள் அனைத்தையும், கோவை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும்.

    இத்திட்டத்தில் ஆற்றுநீர், ஆழ்குழாய் கிணறு, ஆகியவை அனைத்தும் கோவை மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கும். இதன் மீது சூயஸ் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

    குடிநீர் அட்டை வழங்கும் திட்டம் ஏதும் கிடையாது. அதனால் குடிநீர் அட்டையை பயன்படுத்தி, அதனை இயந்திரங்களில் சொருகினால் தான் குடிநீர் வரும் என்ற நிலை என்றுமே ஏற்படாது. வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலமே வழங்கப்படும்.

    எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறும் சூயஸ் நிறுவனம் தான், தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, உங்களது ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை இன்று வரை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதே சூயஸ் நிறுவனம் தான் பழமை வாய்ந்த, முக்கிய திட்டமான மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    இந்த சூயஸ் நிறுவனம், இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், தாவண்கரே, கொல்கத்தா (கிழக்கு) நகரங்களில், மிகப்பெரிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×