search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த ஒதப்பை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பூதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஒதப்பை கிராமத்துக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.இந்த நிலையில் ஒதப்பை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் தேவைக்காக திருவள்ளூரை அடுத்த காந்திநகர் பகுதியில் புதிதாக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    இதனால் பூண்டி ஏரிக்கரை சேதம் அடையும் என்று கூறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    இதற்கிடையே ஒதப்பை கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காந்தி நகரில் நிறுத்தப்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.சந்திரதாசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×