search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டேரியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது
    X

    ஓட்டேரியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது

    ஓட்டேரியில் போலீசாரை தாக்கியதாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    ஓட்டேரி பிரிக்ளின் சாலை திடீர் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் தட்டிக் கேட்டனர். அவர்களை ரவுடிகள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தலைமை செயலக காலனி போலீஸ்காரர்கள் ஜெயராஜ், மொய்தீன், சுல்தான் உள்பட 8 பேர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அவர்கள் ரவுடி கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் எங்கள் பகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கூறி போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கினர்.

    சிறிது நேரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்து கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸ் ஜீப்பின் கண்ணாடியையும் கல்வீசி நொறுக்கினர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் எங்கிருந்து தாக்குதல் நடக்கிறது என்று தெரியாமல் போலீஸ்காரர்கள் நிலை குலைந்தனர். இதையடுத்து 8 போலீஸ்காரர்களும், ரவுடிகள் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதுபற்றி அவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீஸ் படையினர் தாக்குதல் நடந்த இடத்துக்கு சென்றனர்.

    இதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் தப்பிச் சென்று விட்டனர். பின்னர் சேதமடைந்த ஜீப்பை மீட்டு கொண்டு வந்தனர். காயம் அடைந்த போலீஸ்காரர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போலீசாரை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், பிரபு என்கிற ஜனால், சிவா, பார்த்தீபன், கார்த்திக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×