search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் 14 வழக்குகள் 6-ந் தேதி மீண்டும் விசாரணை
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் 14 வழக்குகள் 6-ந் தேதி மீண்டும் விசாரணை

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த 12 வழக்குகள் தொடர்பான விசாரணை வருகிற 6-ந் தேதி நடக்கிறது. #BanSterlite #SterliteProtest

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம் கலவரமாக வெடித்தது.

    போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் அடுக்கடுக்காக 14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

    * துப்பாக்கிச்சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக தலைமைச் செயலாளர். உள்துறை செசலாளர் போலீஸ் டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

    * இந்த சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    * சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    * துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவும் உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது.


    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதாடினர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரிய மனு தொடர்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பில் தாக்கலாகும் பதில் மனுக்களை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பிக்கிறது.

    இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகள் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிடுமா? என்பது குறித்து வருகிற 6-ந் தேதி வழக்கு விசாரணையின் போது தெரியவரும்.

    Next Story
    ×