search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க கவர்னர் இன்று தூத்துக்குடி செல்கிறார்
    X

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க கவர்னர் இன்று தூத்துக்குடி செல்கிறார்

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி செல்கிறார்.
    சென்னை:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர் போராட்டங்களையொட்டி, தூத்துக்குடியில் கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். இடையில் வன்முறை சம்பவம் நடைபெற்றதால், 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் வரை நீட்டிக்கப்பட்டது. இயல்பு நிலை திரும்பியதால், 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்துள்ளது.

    இதற்கிடையே, துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பிறகு அரசு சார்பில் யாரும் தூத்துக்குடிக்கு வரவில்லை என்றும், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் யாரையும் பார்க்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி சென்று, காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    நேற்று காலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தூத்துக்குடி சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி செல்கிறார்.

    சென்னையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் செல்லும் அவர், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 22-ந்தேதி நடந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிகிறார்.

    அதன்பின்னர், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடங்களுக்கும் நேரடியாக சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்கிறார். மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
    Next Story
    ×