search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலி - 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கினார் தினகரன்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலி - 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கினார் தினகரன்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பலியான 13 பேர் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. தலா ரூ.3 லட்சம் வழங்கினார். #SterliteProtest #TTVDhinakaran
    சென்னை:

    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட மக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த 3 நாட்களாக நேரில் சந்தித்து துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் வீடுகளுக்கும் நேரில் சென்று அவர் தலா ரூ.3 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கினார்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவரையும் சந்தித்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினார்.

    சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணி செல்வராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி.தினரகன் கூறியதாவது:-


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது அரசியல் கட்சித்தலைவர்களின் கடமை. ஆனால் அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு வழக்கு போடுவது தவறான அணுகு முறையாகும்.

    நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது மனம் குமுறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். என்பது தான் அவர்களது ஒரே கோரிக்கையாக உள்ளது. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை நான் சந்தித்தது அரசியலுக்காக அல்ல. நான் ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். தூத்துக்குடியில் உள்ளவர்கள் அனைவரும் உன் உறவினர் மாதிரி தான்.

    இது உண்மையா? மக்களுக்கு இது மாதிரி பிரச்சினை இருக்கிறபோது என்னவென்று போய் பார்க்கப்போகிறோம். 3 நாட்களாக நான் இங்கு சுற்றி வருகிறேன்.

    போலீசாரால் பிடித்து செல்லப்படும் நபர்களை சட்டத்துக்கு புறம்பாக நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர் ஒத்துழைப்பதாக கூறினார். தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்புவது தான் எங்கள் நோக்கம் என்றார்.

    இங்குள்ள மக்களின் இன்னொரு கோரிக்கை 13 பேரை சுட்டு கொன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #TTVDhinakaran
    Next Story
    ×