search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    X

    அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவ மழை, தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் இன்று(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடலின் சிலப்பகுதிகள், குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் சிலபகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான நிலை நிலவுகிறது.

    இதையொட்டி, குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் குமரிக் கடல், தெற்கு லட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தற்போது தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    திருவையாறு, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்சுழி, கமுதி, காரைக்குடியில் தலா 7 செ.மீ. மழையும், திருபுவனம், கடலாடி, பேரையூர், சிவகங்கை தலா 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி, சாத்தூர், திருப்பத்தூர்(சிவகங்கை மாவட்டம்), செங்கம், ராசிபுரம், அரிமளம், மேலூர், பரமத்திவேலூரில் தலா 5 செ.மீ. மழையும், கடவூர், சித்தம்பட்டி, விருதுநகர், பஞ்சப்பட்டி, நீடாமங்கலம், பையூர், சோழவந்தான் தலா 4 செ.மீ. மழையும் மானாமதுரை, நாமக்கல், திருமயம், கே.பரமத்தி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, பரமக்குடி, புதுக்கோட்டை, வாழப்பாடி, தோகமலை, வாடிப்பட்டி, பேராவூரணி, அரண்மனைபுதூர், தொண்டி, திருவாடனை, மருங்காபுரி, மேட்டுப்பட்டி, மணப்பாறை, வலங்கைமான், பாலக்கோடு, ராயக்கோட்டையில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சேலம், திருமங்கலம்(மதுரை மாவட்டம்), முதுகுளத்தூர், கோவிலன்குளம், பழனி, மன்னார்குடி, கொடைக்கானல், சேரன்மாதேவி, அறந்தாங்கி, தேன்கனிக்கோட்டை, மதுரை விமானநிலையம், தேவலா, கோத்தகிரி, லால்குடி, அருப்புக்கோட்டை, அன்னூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இது தவிர உசிலம்பட்டி, கும்பகோணம், மேட்டூர், பாம்பன் உள்பட அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. #tamilnews
    Next Story
    ×