search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்களை நியமிக்க பா.ம.க. இளைஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    X

    ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்களை நியமிக்க பா.ம.க. இளைஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் கூடுதல் டாக்டர்களை தமிழக அரசு நியமிக்கவேண்டும் என பா.ம.க. இளைஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்க கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடந்தது. பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பாலு ஆகியோர் வரவேற்றனர். பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் சரவணராஜூ, மாவட்ட தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர் வடிவேலன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில், ராசிபுரம் நகரத்தில் நடந்துவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ராசிபுரம் நகரத்தில் 500 மீட்டருக்கும் அப்பால் மதுபான கடைகளை வைக்காமல் கடை எண்கள் 5961, 5964 ஆகிய 2 கடைகளும் 500 மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. எனவே இந்த 2 மதுபான கடைகளையும் அப்புறப்படுத்தாவிட்டால் நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போதுமான டாக்டர்களை தமிழக அரசு நியமிக்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து ராசிபுரம் உழவர்சந்தைக்கு வெளியில், புதிய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் அதிகளவில் உள்ளன. இதனால் உழவர்சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவரும் பொருட்கள் சரியாக விற்பனை ஆவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உழவர் சந்தைக்கு வெளியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வெளிவியாபாரிகளின் ஆதிக்கம், தலையீடு உழவர்சந்தையில் அதிகமாக உள்ளது. எனவே வெளிவியாபாரிகளின் ஆதிக்கத்தை குறைத்து பொதுமக்கள் பயன்பெரும் வகையில் உழவர் சந்தையின் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிசாமி, தலைமை பேச்சாளர் லோகநாதன், ராசிபுரம் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குணசேகரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×