search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்டிரல் மெட்ரொ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மீண்டும் ஆய்வு
    X

    சென்டிரல் மெட்ரொ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மீண்டும் ஆய்வு

    சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பணிகளின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு ஆணையர் மீண்டும் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.#ChennaiMetroTrain
    சென்னை:

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகளில் சுரங்கப்பாதையில் நிறைவடைந்த பணிகளை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஷெனாய்நகர்- சென்டிரல் இடையே 2-வது வழிப்பாதை, நேரு பூங்கா- சென்டிரல் இடையே 1-வது வழிப்பாதையில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது டிராலியில் சென்று ஆய்வு செய்த பின்னர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியதைப் பார்த்தும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது எழும்பூர், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி-டி.எம்.எஸ். ஆகிய 6 ரெயில் நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வின் மூலம் சுரங்கப்பாதை மற்றும் சுரங்கத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன; ஆனால் சுரங்க ரெயில் நிலையத்துக்கு பயணிகள் செல்லும் பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், இணைப்பு சாலைப்பணிகள், ரெயில் நிலையங்களின் வெளியே கண்ணாடிகள் பொருத்துதல் போன்ற பணிகள் நிறைவடையவில்லை என்பது தெரியவந்தது.

    குறிப்பாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் கையாளப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் கடந்த 14-ந்தேதி நடந்த ஆய்வுப்பணியின் போது பணிகளை விரைந்து முடிக்க பாதுகாப்பு ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி இரவு ஆய்வு பணியை முடித்த, பாதுகாப்பு ஆணையர் சென்னையிலேயே தங்கினார். தொடர்ந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மீண்டும் தன்னுடைய குழுவினருடன் நேற்று காலை சென்று பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார். #ChennaiMetroTrain 
    Next Story
    ×