search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘ஸ்வைப்’ மி­ஷினை போலீசாருக்கு வழங்கிய காட்சி.
    X
    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘ஸ்வைப்’ மி­ஷினை போலீசாருக்கு வழங்கிய காட்சி.

    புதிய திட்டம் இன்று முதல் அமல்- போக்குவரத்து விதியை மீறினால் ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம்

    போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முறையில் சென்னை போலீசார் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
    சென்னை:

    வாகனங்களில் வேகமாக செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக ‘ஸ்பாட் பைன்’ முறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக அமலில் உள்ளது.

    இதற்காக வாகன ஓட்டி களிடமிருந்து போக்குவரத்து போலீசார் ரொக்கமாக பணவசூல் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் ரொக்கமில்லா அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி போலீசார் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்க முடியாது.

    ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய முறையை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப் மிஷின்களை அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனைவியும் மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண், கூடுதல் கமி‌ஷனர்கள் சேசசாயி, ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தின் கீழ் 6 வழிகளில் அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் அபராதத்தை செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி பணபரிவர்த்தனை வழியாகவும் அபராதத்தை செலுத்தலாம்.

    சென்னையில் உள்ள 132 தமிழ்நாடு இ-சேவை மையங்கள் வழியாகவும் வாகன ஓட்டிகள் பணத்தை செலுத்தலாம். அஞ்சல் நிலையம் வழியாகவும் கோர்ட்டிலும் அபராதத்தை செலுத்தலாம்.

    ஸ்வைப் மிஷின் மூலம் அல்லது மற்ற 5 வழிகளிலும் பணம் செலுத்துபவர்கள் இ-செலான் ரசீதை காட்டி வாகன எண்ணை குறிப்பிட்டு அபராதம் செலுத்த வேண்டும். பின்னர் அபராத ரசீதை அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பித்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவு பெறும். இந்த அபராதத்தை வாகன ஓட்டிகள் 48 மணி நேரத்துக்குள் கட்ட வேண்டும்.

    இந்த புதிய முறை குறித்து கூடுதல் கமி‌ஷனர் அருண் கூறியதாவது:-

    ரொக்கமாக போலீசார் அபராத தொகையை பெறும்முறை 25 ஆண்டாக நடைமுறையில் இருந்தது. அது இன்று முதல் முடிவுக்கு வருகிறது. 1992-ல் இருந்து ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இதன்படி போலீசார் அபராதம் விதித்தபின்னர் அந்த தொகையை கோர்ட்டில் போய் கட்டுவதற்கு 3 நாட்கள் வரையில் அலைய வேண்டி இருக்கும்.

    புதிய முறை அமலுக்கு வந்துள்ளதால் இனி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடமிருந்து எக்காரணத்தை கொண்டும் ரொக்கமாக பணம் வாங்கக் கூடாது. அதுபோன்று வாங்கினால் அது லஞ்சம் பெற்றதாக கருதப்படும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×