search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த கல்வெட்டு
    X

    கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த கல்வெட்டு

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த கல் வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் முனியசாமி பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத்தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே மாணவர்கள் இந்த பகுதியில் கி.பி.1213ம் நூற்றாண்டைச்சேர்ந்த சீனப்பானை ஓடுகள், மணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

    தற்போது ஏழாம் வகுப்பு மாணவர்கள் சத்தியேந்திரன், யுவராஜ், விஷால், அருள்தாஸ், 6-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் ஆகியோர் மேலமடையில் சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆசிரியர் முனியசாமியிடம் தெரிவித்தனர்.

    அவர் இதுபற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப் பாளர் ராஜகுருவுக்கு கொடுத்த தகவலின் பேரில் கல்வெட்டு எடுக்கப்பட்டது பற்றி ராஜகுரு கூறியதாவது:-

    மாணவர்கள் கண்டு பிடித்த சூலக்கல் கல்வெட்டு, வேளானூர் அருகில் உள்ள மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடலில் நட்டுவைக்கப்பட்டுள்ளது. சூலக்கல் என்பது சிவன் கோவிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் நான்கு மூலைகளிலும் வைக்கப்படும் எல்லைக்கல் ஆகும். இங்கு ஒரே ஒரு சூலக்கல் மட்டுமே உள்ளது.

    மூன்று அடி உயரமும், ஒரு அடி அகலமும் உள்ள இது கடல்பாறையால் ஆனது. இதில் புடைப்புச் சிற்பமாக திரிசூலம், பிறை, சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இரு பக்கங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. எழுத்துகள் ஆழமில்லாமல் வெட்டப்பட்டுள்ளதால் தேய்ந்துள்ளன. சில எழுத் துக்களையே படிக்க முடிகிறது.

    “ஸ்வஸ்திஸ்ரீ” எனத் தொடங்கும் இதில் விசைய எனும் தமிழ் ஆண்டும் பங்குனி மாதமும் தெளிவாக உள்ளன. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டின் காலம் கி.பி.1714 ஆக இருக்கலாம். இது திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்தது. கீழக்கரை அல்லது உத்தரகோசமங்கை சிவன் கோவிலுக்கு இந்த நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம்

    சேதுபதிகள் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்ட விவரம் செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்த நிலம் உள்ள இடத்தில் திரிசூலக்கல் நடுவது வழக்கம். எனவே சூலக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ள இடம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதை அறியலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×