search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார்
    X

    தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடும் தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். #TamilNaduAssembly #BanwarilalPurohit
    சென்னை:

    தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர் களை பார்த்து வணக்கம் செலுத்துகிறார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது.



    அதன்பிறகு, 10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குகிறார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். கவர்னரின் பேச்சு சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று தெரிகிறது. தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவர் சட்டசபையில் உரை நிகழ்த்துவது இதுவே முதல் தடவை ஆகும்.

    கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். இவை அனைத்தும் மதியம் 12 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது. அத்துடன் இன்றைய கூட்டம் முடிவடையும்.

    சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தும் போது தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பக்கூடும் என்று தெரிகிறது.

    மதியத்திற்கு பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்வது? என்று முடிவு செய்யப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

    ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்க இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 3 பேரும், தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ஏனைய கட்சி உறுப்பினர்களில் ஒருவரும் என சுமார் 7 பேருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அவருக்கு 148 எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அவரும் ஒருநாள் பேச வாய்ப்பு இருக்கிறது.

    கூட்டத்தொடரின் இறுதி நாள் அன்று, உறுப்பினர்களின் விவாதத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பேசுவார். அதைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

    இந்த கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை, நெல்லுக்கான ஆதார விலையை மேலும் உயர்த்துவது, கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தினமும் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கின்றன. எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு இன்றைய கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் இன்றைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    இந்த முதல் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் மார்ச் மாதம் தொடக்கத்தில் மீண்டும் சட்டசபை கூட இருக்கிறது. அப்போது, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, பட்ஜெட் மீதான விவாதமும், அதைத் தொடர்ந்து துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதமும் நடைபெறும். #TamilNaduAssembly #BanwarilalPurohit #tamilnews
    Next Story
    ×