search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் தூய்மை இந்தியா திட்ட பணியை தொடங்கி வைத்தார் கவர்னர்
    X

    தஞ்சையில் தூய்மை இந்தியா திட்ட பணியை தொடங்கி வைத்தார் கவர்னர்

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.#BanwarilalPurohit
    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னராக பன்வாரிலால் பொறுப்பேற்ற கோவை, நெல்லை, குமரி, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    அரசின் நிர்வாகம் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கவர்னரின் ஆய்வை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரி லால் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் எனும் பரதநாட்டிய நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு பேசினார்.





    இன்று (2-ந்தேதி) காலை 6.15 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் பன்வாரிலால் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை கவர்னர் சுற்றி பார்த்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள வருகை பதிவேட்டில் கவர்னர் கையெழுத்திட்டார்.

    அவருடன் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பலர் சென்றனர்.

    பின்னர் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் காலை 11 மணியளவில் ரூ. 7 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வெண்கல சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    பல்கலைக்கழக ஆசிரியர்கள்- மாணவர்கள் எழுதிய ‘‘பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.- பன்முகப்பார்வை’’ என்னும் நூலை வெளியிட்டார்.

    இதையடுத்து தஞ்சை சுற்றுலா விருந்தினர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கவர்னர் பெற்று கொள்கிறார்.

    இதைதொடர்ந்து தொடர்ந்து இன்று மாலை திருவையாறு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழா தொடங்குகிறது. இதில் கவர்னர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சபையின் அறங்காவலர் குழு தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.

    விழாவில் பங்கேற்ற பிறகு கவர்னர் தஞ்சையில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு கார் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    #TamilNews
    Next Story
    ×