search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட்- அ.தி.மு.க.வினர் மோதல்
    X

    மார்த்தாண்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட்- அ.தி.மு.க.வினர் மோதல்

    மார்த்தாண்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள கல்குளம்- விளவங்கோடு தாலுகா வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த சம்பத் சந்திரா சமீபத்தில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது.

    இதையடுத்து தற்காலிகமாக பொறுப்பு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று மாலை நடந்தது. தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோசும், அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    நிர்வாக இயக்குனர் சுந்தரபாரதி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரை தலைவராக தேர்வு செய்யுமாறு அவர். வலியுறுத்தினார். ஆனால் உறுப்பினர்கள் யாரும் அதனை ஏற்கவில்லை. வாக்களிப்பு நடத்தி தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என கூறினர்.

    சங்கத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களில் 2 இடங்கள் காலியாக உள்ளது. நேற்று 9 உறுப்பினர்கள் சேர்ந்து புதிய தலைவருக்கு ஓட்டு அளித்து தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அலுவலக பதிவேட்டில் அவரவர் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லீமாரோசுக்கு ஆதரவாக 4 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். 5-வதாக உறுப்பினர் லலிதா என்பவர் கையெழுத்திட வந்தார். அப்போது அவரை நாஞ்சில் டொமினிக் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், நாஞ்சில் டொமினிக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் லலிதா காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    லீமாரோசுக்கு 5 பேர் வாக்களித்து உள்ளனர், எனவே அவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்று கம்யூனிஸ்டு கட்சியினரை சமாதானப்படுத்தினர்.

    பின்னர் மோதலில் காயம் அடைந்த லலிதா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். புகாரில் நாஞ்சில் டொமினிக் தன்னை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறி உள்ளார்.

    இதேபோல நாஞ்சில் டொமினிக்கும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மீது போலீசில் புகார் செய்தார். 2 தரப்பு புகார்களை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாஞ்சில் டொமினிக் கடந்த சட்டசபை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.
    Next Story
    ×