search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்கால தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
    X

    தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்கால தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளன. ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலம் 25 ஆயிரத்து 867 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின்மோட்டார் மூலம் தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 2006-ம் ஆண்டு அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பின்பும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தனியார் தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த விலைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 போகம் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்களில் ஒரு போகம் விவசாயம் செய்வது என்பதே அரிதாகிவிட்டது.

    தமிழக அரசு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை ரூ.10-க்கு விற்பனை செய்து வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகளுக்கு லிட்டருக்கு வெறும் ஒரு பைசா என்ற ரீதியில் தண்ணீரை வழங்கி வருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கக்கூடாது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.



    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜோயல் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரது தரப்பில் மூத்த வக்கீல் ராகவாச்சாரியார் ஆஜராகி வாதாடினார்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல், 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையிலேயே தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, ‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. வறட்சியால் அங்குள்ள தென்னை, பனை மரங்கள் கருகி வருகின்றன. பொதுமக்கள் குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர். குடிநீருக்காக மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்று 2008-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து தனியார் தொழிற்சாலைக்கு வழங்க எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வக்கீலிடம் கேட்டார்.

    இதன்பின்பு, ‘அரசாணைப்படி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க அணையில் இருந்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதம் 4-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 
    Next Story
    ×