search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மாட்டோம்: தமிழக அரசு உத்தரவாதம்
    X

    மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மாட்டோம்: தமிழக அரசு உத்தரவாதம்

    மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.
    சென்னை:

    திருப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் தமிழக அரசு திறக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், ‘குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

    அதில், ‘கிராம சபையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டால், அந்த கிராமங்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அமைதியாக வழிகளில் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை கைது செய்யக்கூடாது. அவர்கள் மீது தடியடி நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட் ரமணி, ‘மதுபானக் கடைகளுக்கு எதிராக, அரசியல் காரணத்துக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி 3 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட கடைகளில் வெறும் 300 கடைகள் தான் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பொதுவாக போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு இடையூறும் இல்லாத இடங்களில் தான் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், அங்கு மதுபானக் கடை திறக்கப்படாது’ என்று உத்தரவாதம் அளித்தார்.

    மேலும் அவர், ‘மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது. மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சமுதாயத்துக்கு நல்லது அல்ல. மதுபானக் கடைகளை அதிக அளவில் திறப்பதன் மூலம் அரசு வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறது என்று நன்றாக தெரிகிறது. ஜனநாயாக முறையில் மக்கள் அன்றாடம் போராட்டம் நடத்துகின்றனர். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளி வருகின்றன. மக்களின் விருப்பத்துக்கும் தமிழக அரசு மதிப்பு அளிக்கவேண்டும். தமிழகத்தில் கூடுதலாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் முடிவினை தமிழக அரசு மறுஆய்வு செய்யவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×